ஒரு வாரம் அமைதியாய் கடந்தது.
அன்று புதன்கிழமை. எனக்கு மிகவும் பிடித்த நாள். முதல் வகுப்பே தமிழ்.தமிழாசிரியர் தமிழையும் சம கால நிகழ்வுகளையும் சரிவிகிதத்தில் கலந்து கட்டுவார். முதல் வகுப்பே இவ்வாறு இருந்தால், எனக்கு அன்று முழுவதும் உற்சாகமாய் இருக்கும். அதுமட்டுமல்லாது, என்றும் தமிழில் முதல் மாணவனாய் நான் இருப்பதால் தமிழ் ஆசிரியரின் செல்லம் எனக்கு அளவுக்கதிகமாகவே கிடைக்கும் வகுப்பு. ஆதலால் என்றுமே நான் ரொம்ப அலெர்ட்டாக இருக்கும் வகுப்பு.
தமிழ் ஆசிரியருக்கு ஒரு விசித்தர பழக்கம் உண்டு. வகுப்பிற்கு தான் கொண்டு வரும் புத்தகத்தை யாரிடேனும் கொடுத்துவிட்டு, அவர்கள் புத்தகத்தை வாங்கித்தான் பாடம் நடத்துவார்.
"வணக்கம் ஐயா ஆஆஆஆஆஆஆஆ" அனைவரும் சேர்ந்து கோரஸ் பாடினோம். ஆங்கில பள்ளியாய் இருந்தமையால் தமிழ் ஆசிரியரை மட்டும் இவ்வாறு வரவேற்கும் பொழுது, உள்ளுரே ஒரு இனம்புரியா உணர்வு கிளம்பி முகத்தில் சிரிப்பாய் வெளிவரும். ஒரு சில தமிழ் ஆசிரியர்கள் இந்த சிரிப்பை கேலி சிரிப்பு என்றெண்ணி, தங்களையும் மற்ற ஆசிரியர்கள் போல விளிக்க கட்டளை இட்டு இருந்தார்கள். பாவம் அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவே.
"வணக்கம் மா. இன்னைக்கு என்ன பாட்டு பெருசா இருக்கு. பாடம் கேட்க யாருக்கும் மனசில்லையா? அதெல்லாம் முடியாது, தேர்வுகள் நெருங்கிடுச்சு, நீங்க என்ன அழுதாலும் கண்டிப்பா இன்னைக்கு பாடம்தான்."
வகுப்பு எங்கும் அமைதி.
"என்ன பயந்துடிங்களா ? சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். பரிட்சையை நினைத்து படித்தால் நல்லது தான். மார்க்கு வாங்குவே ஆனால் அடுத்த நாள் பாடத்தை மறந்துடுவே. மத்த எதை வேண்டும்னாலும் மறக்கலாம், ஆனால் தமிழை மறக்கலாமா ? அதனால தமிழ் படிக்கும் போது தேர்வுக்காக படிக்காதே, வாழ்கையில் காணப்போகும் பிரச்சனைகளுக்கு இது தான் தீர்வுன்னு நினைத்து படிங்க. சரிங்களா"
இதுதான் எங்கள் தமிழ் வாத்தியார்.
"சரிமா. இன்றைய பாடத்தை ஆரம்பிக்கலாம்" என்று கூறிக்கொண்டே கண்களால் புத்தகங்களை தேடினார்.
இரண்டாவது வரிசையில் இருந்த சீதாவின் புத்தகத்தை வாங்கினார்.
"இன்று செய்யுள் நடத்தலாம்" என்று கூறிக்கொண்டே தன் மேஜை அருகே சென்றார்.
அவரின் செய்யுள் நடைக்கு நான் ரசிகன் என்பதால் அவருக்கு முன்பே அந்த பகுதியை எடுத்து வைத்து, தயாராகி, அவரையே பார்த்து கொண்டு இருந்தேன். அனைவரும் அதே.
அப்பொழுதுதான் அது நடந்தது. சரியாய் சொல்லவேண்டும் என்றால், "அது விழுந்தது"
எங்க வகுப்பு சீனியர் என்னை விரட்டி விரட்டி வரையச்சொன்ன அந்த இளம் காதலர் படம், சீதாவின் புத்தகத்தில் இருந்து பிரிந்து, எங்கள் தமிழ் ஆசிரியர் மற்றும் எங்கள் வகுப்பினோர் அனைவரும் பார்க்க பார்க்க தரையில் அழகாய் விழுந்தது.
நான் மஞ்சளில் வரைந்த ரோஜா மட்டும், ரத்த சிகப்பாய் மாறி இருந்தது.
ஆசிரியர் சீதாவை பார்க்க, சீதா என்னை பார்த்து கொண்டு இருந்தாள்.
ஹே டண்ட டக்கா டண்டன் டண்ட டக்கா.....
0 comments:
கருத்துரையிடுக